அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசிக்கும் இலங்கை ஏ அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான 51 வயதுடைய சுரஞ்சித் சில்வா, பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் சன்பரி பகுதியில் பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எனினும், குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், வழக்கை விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரியிருந்தார்.
இதையடுத்து, பிராட்மெடோஸ் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில், இந்தச் சம்பவம் தனக்கு ஏற்படுத்திய கடுமையான மன உளைச்சல் குறித்து அவர் விவரித்துள்ளார்.
தனது அனுமதியின்றி தனது உடலையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் பாதிக்கும் வகையில் எவரும் நடந்துகொள்ள உரிமையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், பாதுகாப்பற்ற உணர்வும் மன அச்சமும் அதிகரித்துள்ளதாகவும், பிறருடன் நெருக்கமாகப் பழகுவதற்குக்கூடத் தயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சுரஞ்சித் சில்வா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இது தவறான தருணத்தில் இடம்பெற்ற ஒரு பிழை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், சுரஞ்சித் சில்வாவுக்கு முன்னர் குற்றப் பின்னணி எதுவும் இல்லை எனவும், இந்தத் தீர்ப்பு அவரது தொழில் மற்றும் விசா நிலைமையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறிய சுரஞ்சித் சில்வா, இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன், அங்கு இரண்டாம் மட்டத் தகுதி பெற்ற கிரிக்கெட் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவருக்கான தண்டனை எதிர்வரும் 26ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
