“அரசியல் எதிரிகளை முடக்கவே அரசாங்கம் முயற்சி” – சஞ்சீவ எதிரிமான்ன குற்றச்சாட்டு!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், சமூகத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக அரசியல் எதிரிகளை முடக்குவதற்கே முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அரசாங்கம் முன்மொழியும் சில சட்டங்கள் மூலம், தனிநபர் சுதந்திரம் தொடர்பான அதிகாரங்கள் நீதிமன்றங்களிடமிருந்து விசாரணை அமைப்புகளுக்கு மாற்றப்படுவதாக அவர் விமர்சித்தார்.

மேலும், ஹோமாகம பொலிஸ் காவலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்குவது நீதிமன்றங்களின் ஊடாகவே இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அத்துடன், அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைய செயற்படுகிறதா என்றும், மக்களுக்கு வழங்கிய கொள்கை உறுதிமொழிகளை நிறைவேற்றுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Post a Comment