கபூர் மாமா’வுக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை!

வண்ணாத்திவில்லு, லக்டோவத்த பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைச் சேமித்து வைத்திருந்த வழக்கின் 3 ஆம் பிரதிவாதியான 'கபூர் மாமா' என அழைக்கப்படும் மொஹமட் ஷரீப் ஆதம் லெப்பை என்பவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தன் மீதான 5 குற்றச்சாட்டுகளையும் பிரதிவாதி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

மேல்நீதிமன்ற நீதிபதிகளான லால் ரணசிங்க பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்ரமசிங்க ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாம் இந்தத் தீர்ப்பை அளித்தது.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், அவற்றை ஒரே காலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதால் மொத்தத் தண்டனைக் காலம் 12 ஆண்டுகளாக அமையும்.

பிரதிவாதி ஏற்கனவே விளக்கமறியலிலும் தடுப்புக் காவலிலும் கழித்த ஏழரை ஆண்டுகள் தண்டனைக் காலத்திலிருந்து கழிக்கப்படுவதால், அவர் மேலும் சுமார் நான்கரை ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருக்க வேண்டும்.

 கேகாலை மற்றும் மட்டக்களப்பு மேல்நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள மற்றைய வழக்குகளுக்காக அவரை அழைத்துச் செல்லும் போது விசேட பாதுகாப்பு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment