இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல் சேவை கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான, கொழும்பு 11, பிரதான வீதி, இலக்கம் 37 இல் அமைந்துள்ள கப்பல்துறை கட்டடம் நவீனமயமாக்கப்பட்டு, உறுப்பினர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நவீனமயமாக்கப்பட்ட கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற புதிய நிர்வாக சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கூட்டுறவுத் துறையுடன் தனக்குள்ள நீண்டகால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள், நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியதுடன், கூட்டுறவுப் பள்ளியில் கற்பித்த அனுபவமும் தனக்குள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு காலத்தில் சிறப்பாகச் செயற்பட்ட கூட்டுறவுத் துறை, காலப்போக்கில் பலவீனமடைந்ததாகத் தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, திறந்த பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சர்வதேசப் பொருளாதார மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருந்தாலும், திறமையான நிர்வாகமின்மையும் முக்கிய காரணமாக அமைந்ததாகச் சுட்டிக்காட்டினார்.
எனினும், அண்மைக் காலமாகக் கூட்டுறவுச் சங்கங்கள் புதிய வர்த்தக முயற்சிகளுடன் மீண்டும் புத்துயிர் பெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளில் பால் உற்பத்தி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டுறவுச் சங்கங்கள் திறம்படவும் இலாபகரமாகவும் இயங்குவதைச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கையின் கூட்டுறவுத் துறையும் மேலும் வளர்ச்சியடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கூட்டுறவுச் சங்கங்கள் செல்வந்தர்களுக்கான அமைப்புகள் அல்ல என்றும், கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய அமைப்புகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வின் நிறைவில், புதிய கூட்டுறவுச் சங்க நிர்வாகத்திற்கும் அதன் வர்த்தக முயற்சிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

