குற்ற விசாரணைகளின்போது, சட்ட நடைமுறைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகக் கையடக்கத் தொலைபேசிகளைக் கைப்பற்றி, அவற்றிலுள்ள தகவல்களைப் பொலிஸார் பரிசோதிக்க முடியும் எனப் பொலிஸ் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
ஒரு குற்ற விசாரணைக்கு ஆதாரமாகத் தொலைபேசியில் உள்ள தகவல்கள் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தர்ப்பங்களில், குறித்த தொலைபேசியைக் கைப்பற்றி நீதிமன்றத்தில் சான்றுப் பொருளாகச் சமர்ப்பிக்க முடியும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளைப் புழக்கத்தில் விடுதல் உள்ளிட்ட பாரதூரமான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின்போது, தொலைபேசிகளில் உள்ள தகவல்கள் முக்கிய ஆதாரங்களாக அமையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பரிசோதனைகள் பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனினதும் கையடக்கத் தொலைபேசியையும் பரிசோதிக்க வேண்டிய அவசியம் பொலிஸாருக்கு இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
குற்றங்களைத் தடுப்பதற்கும், விசாரணைகளுக்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சட்ட வரம்புகளுக்குள் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
