ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் – ஒளிப்பதிவாளர் கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் ஒருவர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறியபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்போது, அங்கு பணியில் இருந்த தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் ஒருவர், ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை கமெராவால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் குறித்த ஒளிப்பதிவாளர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment