நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தனியார் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டீசல் விலை அதிகரிப்பினால் ஏற்படும் நஷ்டத்தை தமது தரப்பினரே ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, குறுகிய தூர பேருந்து சேவைகளுக்கு நாளொன்றுக்கு சுமார் 250 ரூபாவும், நீண்ட தூர சேவைகளுக்கு சுமார் 1,000 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கு தாம் தயாராக இல்லை எனவும், கட்டண உயர்வுக்கான ஒரு குறிப்பிட்ட பொறிமுறைக்குள் தமது சங்கம் செயற்பட்டு வருவதாகவும் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் எரிபொருள் மானியத்திற்காக பெருமளவு நிதியை ஒதுக்குவதற்கு பதிலாக, டீசல் விலை அதிகரிப்பை தவிர்த்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
