நாளை முதல் பலத்த மழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நாளை (13) குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் தாக்கம் காரணமாக நாளை முதல் அடுத்த சில நாட்களில் இலங்கையிலும், நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள், கடலில் பயணம் செய்வோர் மற்றும் மீனவ சமூகத்தினர் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment