சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய சலுகைகள்

2026–2027ஆம் ஆண்டுக்கான சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, கேள்வி உபகரணங்களைத் திருத்துவதற்காக ரூ.75,000 வரையும், குறிப்பிட்ட நீண்டகால நோய்களுக்கான மருந்துச் செலவுகள் மற்றும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக ரூ.20,000 வரையும் காப்புறுதி நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் விசேட உதவிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், புற்றுநோய் சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய பரிசோதனைகள், விபத்துகளால் ஏற்படும் இடுப்பு, தோள்பட்டை மற்றும் முழங்கால் மூட்டுகளை மீளமைப்பதற்கான முக்கிய சத்திரசிகிச்சைகள், PET Scan பரிசோதனை ஆகியவற்றையும் தீவிர நோய்களுக்கான காப்புறுதிப் பிரிவில் உள்ளடக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு, கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறும் கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளின்போது ஏற்படும் திடீர் விபத்துகளால் மாணவர்கள் உயிரிழந்தால், ரூ.100,000 இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிட்டட் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, 2026 செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2027 ஓகஸ்ட் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இப்புதிய சலுகைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மாணவர்கள் நோய் மற்றும் விபத்துகளால் எதிர்கொள்ளும் சவால்களைக் குறைத்து, அவர்களின் கல்வித் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

Post a Comment