காத்தான்குடியில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீடுகளில் இருந்த இலத்திரனியல் உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை இரவு (19) புதிய காத்தான்குடி தெற்கு 167C கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள முத்துவாப்பா லேனில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரண்டு வீடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இடி, மின்னல் தாக்கத்தினால் வீடுகளின் சில பகுதிகளும் இலத்திரனியல் உபகரணங்களும் முழுமையாகவோ பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத்தின் பணிப்புரைக்கு அமைவாக, பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று சேதங்களைப் பார்வையிட்டதுடன், பாதிப்புகள் தொடர்பான தகவல்களையும் சேகரித்துள்ளனர்.
