ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்! மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை



இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டதாகக் கூறி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் சுபாஷ் சுப விக்ரம கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், துறவற வாழ்க்கை என்பது பல்வேறு தியாகங்களை உள்ளடக்கியது எனக் குறிப்பிட்டதுடன், நீதிமன்றத்தால் ஒருவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும், ஜனாதிபதிக்கு சட்டப்பூர்வ அதிகாரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு ஏதேனும் ஒரு வகையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், நீதிமன்றத் தீர்ப்பை தாம் முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்த அவர், ஞானசார தேரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்செயல் கொலை, கொள்ளை அல்லது அரச சொத்துக்களை சேதப்படுத்திய குற்றம் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விடயத்தை மனிதாபிமான கண்ணோட்டத்தில் பரிசீலித்து, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment