பணத்திற்காக தம்பதியினர் செய்த கேவலமான காரியம்

 




வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வெலிமடைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இத்தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான இத்தம்பதியர் தங்களது நிறுவனத்தை களனி - தளுகம, கிரிபத்கொட பகுதியிலுள்ள முகவரியொன்றில் நடத்தி வந்துள்ளதுடன், அந்நிறுவனத்தின் உரிமம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.

எனினும், இவர்கள் அதே நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, வெலிமடை நுக்கத்தலாவைப் பகுதியில் மீண்டும் ஒரு அலுவலகத்தை ஆரம்பித்து இந்த மோசடியை தொடர்ந்து நடத்தி வந்துள்ளதாகப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்போது சேர்பியா, ஐக்கிய அரபு அமீரகம், கொரியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக  கூறி, எவ்வித வேலைவாய்ப்பு ஆணைகளும் (Job Orders) இல்லாத நிலையில் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்து வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் நடப்பு ஆண்டின் செப்டம்பர் 09ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் இத்தம்பதியருக்கு எதிராக 12 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதன் மூலம் இவர்கள் மொத்தம் 82 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கண்டறிந்துள்ளது.

கைது செய்யப்பட்ட தம்பதியர் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதில் கணவர் கடுவலைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 26ஆம் திகதி மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment