பனை வடிசாலைகளின் வரி, கட்டண உயர்வுக்கு தீர்வு? 20ஆம் திகதி விசேட கலந்துரையாடல்

 வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையை பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் கோரிக்கைக்கு அமைய, பனை வடிசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பிரதி அமைச்சர் அனில் ஜெயந்தமற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள மதுவரி மற்றும் பல்வேறு கட்டணங்களால், சிறிய அளவிலான பனை வடிசாலைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சில கட்டணங்கள் 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும், இதனால் சில வடிசாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பனைத் தொழில் வட மாகாண மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடையது என்பதால், சிறிய உற்பத்தியாளர்களுக்கு ஏற்ற வகையில் வரி மற்றும் கட்டண முறையை மாற்றியமைக்க வேண்டும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி நிதி அமைச்சு மற்றும் தொடர்புடைய அதிகாரிகள், பனை உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடலை நடத்தி, தற்போதைய வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து சாதகமான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment