மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 16 வயது சிறுமியைத் தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், சிறுமியின் சகோதரியின் கணவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ள மட்டக்களப்பு மேல் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் நேற்று (16.10.2026) வழங்கினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில், மாங்கேணி பகுதியில் வைத்து குறித்த சிறுமியைத் தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். பின்னர், 2023ஆம் ஆண்டு குறித்த வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி குறித்த நபர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து, நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் முன்னிலையாகி வாதாடினர்.
நீதிமன்றத் தீர்ப்பின்படி, குறித்த நபர் 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிப்பதுடன், 5,000 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
