சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் பிக்குவின் மேன்முறையீடு நிராகரிப்பு! 10 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி


சிறுவர் பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட பௌத்த பிக்குவின் மேன்முறையீட்டை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதன் மூலம் அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமல் ரணராஜா மற்றும் டாக்டர் சுமுது பிரேமச்சந்திரா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட பிக்கு, தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளிலும் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

2014 நவம்பர் 23ஆம் திகதி முதல் 2015 ஜனவரி 23ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஏழு வயது என்பதுடன், குறித்த பிக்குவுடன் அதே விகாரையில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் முடிவில், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் தலா ஆறு மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. சிறைத்தண்டனைகள் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படுவதுடன், பாதிக்கப்பட்டவருக்கு 100,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

மேன்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், சிறுவன் நம்பகமான மற்றும் உண்மையான சாட்சியத்தை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டது. குறுக்கு விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்ட முரண்பாடு, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முக்கியக் குற்றச்சாட்டுகளைப் பாதிக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

அரசாங்கத்தின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷானில் குலரத்னே ஆஜராகியிருந்தார்.

Post a Comment