IMF உடன் சஜித் முக்கிய சந்திப்பு!

 சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய உதவித் திட்டங்களைச் செயற்படுத்துதல் மற்றும் தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஒப்பந்தத்திற்கு அப்பால் நாட்டின் பொருளாதார தொலைநோக்கு குறித்து விவாதிப்பதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

நாட்டின் வெளிப்படைத் தன்மை, அந்நியச் செலாவணி கையிருப்பு, கடனின் நிலையான தன்மை, நிதி நிலைமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் தற்போதைய திட்டத்திற்கு அப்பால் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு இலங்கைக்குத் தேவையான நிபந்தனைகள் உட்பட 2027 மார்ச் மாதத்திற்குப் பிந்தைய இலங்கையின் பொருளாதார மீள்தன்மை குறித்து இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர்.

நிலையான கடன் கொள்கைகள், நிர்வகிக்கக்கூடிய வெளிநாட்டு நிதித் தேவைகள் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான மேம்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகள் உட்பட, தற்போதைய திட்டத்தின் முடிவில் இலங்கை அடைய வேண்டிய அளவிடக்கூடிய பொருளாதார இலக்குகள் குறித்தும் இங்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

நிதி ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார சீரமைப்புகள் மூலமாக, உழைக்கும் மக்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மீது சமநிலையற்ற சுமை சுமத்தப்படக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மேக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிதி ஒழுக்கத்தைப் பேணுகின்ற அதேவேளை, சாதாரண குடும்பங்கள் மற்றும் நுண், சிறிய, நடுத்தர அளவிலான நுவெநசிசளைநள எதிர்கொள்ளும் உண்மையான பொருளாதார நெருக்கடிகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், ஐ எம் எப் ஆதரவுடனான பொருளாதார சீர்திருத்தத் திட்டமானது, வெறும் மேக்ரோ-பொருளாதாரக் குறிகாட்டிகள் மூலம் மட்டும் மதிப்பிடப்படாமல், வீட்டுத்தொகுதி, தனிநபர் மற்றும் வியாபார மட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மூலமே மதிப்பிடப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

Post a Comment