கொலை வழக்கொன்றில் குற்றவாளியாகி மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்வதைத் தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வெளிநாட்டுப் பயணத் தடையை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் ஒக்டோபர் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்புவதற்கும் நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, அக்காலகட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பிரேமலால் ஜெயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
அந்த மரண தண்டனைக்கு எதிராக பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர்களைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்பதால், அதனை வலுவிழக்கச் செய்து தண்டனை வழங்கும் உத்தரவை வழங்குமாறு கோரி, இச்சம்பவத்தால் பாதிக்கப்படுபவர்களால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு பிரதம நீதியரசர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார விடுத்த கோரிக்கையை பரிசீலித்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம்; இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
