தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், திடீரென அங்கு சென்ற பொலிஸார், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஒலிபெருக்கிகளை அகற்றுமாறும், அவற்றை பயன்படுத்துவதற்கான அனுமதியை பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொள்ளுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், தாங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதாகவும், அனுமதி தேவைப்பட்டால் அதனை வழங்குமாறும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் விபரங்களையும் பொலிஸார் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, போராட்டம் நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
