பலாங்கொடை, உடகந்த பகுதியில் உள்ள ஸ்ரீ வீர விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பலாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சப்ரகமுவ மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு விரைவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சம்பவத்திற்கான காரணம் தொடர்பிலும், ஆலய வழிபாடு தொடர்பாக அப்பகுதியில் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் எதிர்ப்புகள் குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஆலய நிர்வாகத்தினருடனும் அப்பகுதி மக்களுடனும் தொடர்புகொண்ட பிரதியமைச்சர், நிலைமை குறித்து கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
