சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனையை சேர்ந்த தமிழ் இளைஞரின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக இராஜதந்திர தலையீடுகளை மேற்கொள்ளுமாறு 'சிங்ஹல ராவய' தேசிய அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவ் அமைப்பின் தலைவர் வணக்கத்திற்குரிய அக்மீமன தயாரத்ன தேரர், மனிதநேய அடிப்படையில் குறித்த இளைஞருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை தளர்த்துவதற்கு இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் திலீபனின் உருவத்தை வெண்கலச் சிலையாக வடித்துள்ளமைக்கு தேரர் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
நாட்டின் சட்டத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இடம்பெறும் இவ்வாறான பிரசாரங்களை அதிகாரிகள் உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைப்பின் செயலாளர் மதுபாஷண பிரபாத் ரணஹங்ச, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், தீவிரவாதக் கருத்துக்கள் மீண்டும் தலைதூக்குவதைத் தடுப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
