புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய தடுப்பூசி மருந்துகளின் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி முறைகேடுகள் குறித்து சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பின் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 'G-CSF' எனும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1,90,000 தடுப்பூசி பாட்டில்கள், உரிய லேபிள் வழிகாட்டல்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு நோயாளிகள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், இந்த இறக்குமதி தொடர்பான முறையான அனுமதிகள் மற்றும் தரச்சான்றிதழ்கள் குறித்த உண்மைகளை மறைப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறினாலும், கள நிலவரப்படி வைத்தியசாலைகளில் போதிய தடுப்பூசிகள் இல்லாததால் நோயாளிகளுக்கு முழுமையான மருந்தளவை வழங்க முடியாமல் வைத்தியர்கள் சிரமப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த கால ஆட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகளே தற்போதும் முக்கிய பதவிகளில் நீடிப்பதாகத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ, இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறும், தட்டுப்பாடின்றி தரமான மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
