கொழும்பு, கொம்பனித் தெருவில் இரகசியமாக நடத்தப்பட்டு வந்த பாதாள அதாவது நிலக்கீழ் இரவுப் கேளிக்கை விடுதி ஒன்றை கொழும்பு சுங்க விசேட நடவடிக்கை பிரிவின் அதிகாரிகள் குழுவினர் இணைந்து முற்றுகையிட்டுள்ளனர்.
கொழும்பின் அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட கொம்பனித் தெரு பகுதியில், பார்ப்பதற்கு முருக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை விற்பனை செய்யும் ஒரு சாதாரண கடை போல இந்த் இடம் காணப்பட்டுள்ளது.
எனினும், இந்த இடத்தில் இரகசியமாக நிலத்தடி கேளிக்கை விடுதி ஒன்று இயங்கி வருவதாக அண்மையில் தகவல் கிடைத்திருந்தது.
அதற்கமைய, கொழும்பு சுங்க விசேட நடவடிக்கை பிரிவின் அதிகாரிகள், சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, அந்த விற்பனை நிலையத்தில் இருந்த முருக்கு பைக்கற்றுக்கள்; வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய அலமாரியை அகற்றியபோதே, உள்ளே செல்வதற்கான இரகசிய வழி கண்டுபிடிக்கப்பட்டது.
அடைக்கப்பட்டிருந்த அந்த இரகசிய வழியின் வழியே உள்ளே சென்று பார்த்தபோது, எவரும் எளிதில் கண்டறிய முடியாத வகையில் மிகவும் இரகசியமாக சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தது தெரியவந்தது.
மேலும், எவ்வித சட்டப்பூர்வ அனுமதியும் இன்றி இந்த கேளிக்கை விடுதி நடத்தப்பட்டு வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெளிநாட்டு மதுபான போத்தல்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.
அத்துடன், இந்த இடத்தில் மதுபானம் விற்பனை செய்வதற்கான எவ்வித உரிமமும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
