பதுளையில் முதல் கல் பதித்த இந்தியா



பதுளை மாவட்டம், உவா பரணகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அலகொல்ல தோட்டத்தில் 51 புதிய வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பணி நேற்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடன் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் 'இந்திய வீட்டுத்திட்டத்தின்' நான்காம் கட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைகான இந்திய பிரதி உயர்ஸ்தானிகரும் கலந்துகொண்டார்.

மலையக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் கண்ணியமான வாழ்விடங்களை வழங்குவதையே இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இத்திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 51 குடும்பங்களும், மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதியென அடையாளம் காணப்பட்ட இடத்தில் 13 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வந்தவர்களாவர்.

மண்சரிவு அபாயத்தால் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த சவால்களுக்குத் தீர்வுகண்டு, இக்குடும்பங்களுக்குப் பாதுகாப்பான குடியிருப்புச் சூழலையும் மேம்பட்ட வாழ்வாதாரத்தையும் வழங்குவதே இந்தப் புதிய வீட்டுத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ், இந்திய அரசாங்கம் ஒரு வீட்டுக்கு 2.8 மில்லியன் ரூபாவையும், இலங்கை அரசாங்கம் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒரு வீட்டுக்குக் மேலதிகமாக 400,000 ரூபாவையும் ஒதுக்கியுள்ளது.

இதன்படி, நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீட்டின் மொத்தப் பெறுமதி 3.2 மில்லியன் ரூபாவாகும்.

Post a Comment