பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
இவர், கடந்த (27) இடம்பெற்ற இத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 'களு நோனா' என அழைக்கப்படும் பெண்ணின் தாயாராவார்.
பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த த்ரீவீலரை (முச்சக்கரவண்டி) இலக்கு வைத்து நேற்று முற்பகல் வேளையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியிருந்தது.
த்ரீவீலரை பின் தொடர்ந்து காரில் வந்த குழுவினர், T-56 ரக துப்பாக்கியால் இத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான த்ரீவீலர் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், காயமடைந்த இரு பெண்கள் பத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண்களில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
வாடகைத் த்ரீவீலரில் பயணித்த போதே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த பெண், அம்பலாங்கொட ரெட்குரோஸ் வீடமைப்பு, தொடஹேன பகுதியைச் சேர்ந்த சுசிதா இரோஷனி எனப்படும் 47 வயதுடையவராவார்.
'களு நோனா' என்ற பெயரால் அறியப்பட்ட இவர், தற்போது சிறைச்சாலையிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான 'லொகு பெட்டி' என்பவரின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பின் பிரதான பெண் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
21 கிராம் 710 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் இவருக்கு எதிராக பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று நிலுவையிலுள்ள நிலையில், அது தொடர்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பத்தேகம மாவட்ட குற்றவியல் பிரிவில் முன்னிலையாகி கையொப்பமிடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
அதற்கமைய, நேற்று முன்தினம் வாடகை த்ரீவீலரில் சென்று பொலிஸில் முன்னிலையாகிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.