விலகமாட்டோம், ஆனால் அடிப்பணியவும் மாட்டோம்..!




சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து விலகுவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை என  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர், சில கணிப்புகள் வெற்றியளித்துள்ள போதிலும், மேலும் சில கணிப்புகளுக்கான இலக்குகள் இன்னும் எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், உலகின் தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் ஆகிய அனைத்தையும் கருத்திற்கொண்டு தேவையான தருணத்தில் தீர்மானம் எடுக்க முடியும் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். 

அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை விலகவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். 

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து விலகி மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் அங்கு கூறியிருந்தார். 

எனினும், இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இது தொடர்பில் வினவப்பட்ட போது, அதற்கான நிலையான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறினார். 

Post a Comment