போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் ஹர்ஷன நானயக்காரா தெரிவித்தார்
இதுவரை இல்லாத வகையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதிகளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் தாமதமாகும் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய பணியாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் இரவு 10.00 மணி வரை கடமையாற்றி அறிக்கைகளை விரைவாக வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,081 இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மஹர சிறைச்சாலைக்குரிய 500 அறிக்கைகள் கடந்த மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிலுவையில் உள்ள அனைத்து அறிக்கைகளையும் வழங்கி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் அவசர மோதல்கள் ஏற்படும் போது விரைவாகச் செயற்படவும், கைதிகளின் நலன்களை ஒழுங்குபடுத்தவும் 15 சிறைச்சாலைகளில் ஒருங்கிணைந்த பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது.
மோதல்கள் உருவாவதற்கு முன்பே கண்டறிந்து தீர்வுகாண்பது, உள்ளூர் அளவில் பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினருடன் ஒருங்கிணைந்து விரைந்து செயல்படுவது இதன் முக்கிய நோக்கங்களாகும்.
மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட சம்பவத்தின் போது தீக்கிரையான முதன்மை ஜெயிலர் அலுவலகம், புனரமைப்புப் பிரிவு உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
சிறையிலுள்ள அனைவரும் குற்றவாளிகள் அல்லர்; ஒரு சந்தர்ப்பத்தில் தவறிழைத்தவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
விடுதலைக்குப் பிறகு போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடாமல், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் நன்மதிப்புள்ள உழைப்பாளிகளாக கைதிகள் மாற வேண்டும் என தெரிவித்தார்
