சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜனை விடுவிப்பதற்கு தலையிடுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அமெரிக்க தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இக்கோரிக்கையை விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குறித்த இளைஞனின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரி நேற்று இரவு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இந்துக்கள் சிலர் தீபமேற்றி சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை அந்த தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கான விசேட நடவடிக்கை ஒன்றை ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, அவர்கள் நேற்று மாலைத்தீவுக்கு விஜயம் செய்து, அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீதைச் சந்தித்து, குறித்த இலங்கையரைக் காப்பாற்ற தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சவூதி அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளதால், மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதியிடம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டதாக பைசர் முஸ்தபா குறிப்பிட்டார்.
மேலும், சிவராஜா அனோஜனை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதற்காக இவ்விருவரும் வரும் நாட்களில் சவூதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
