உயிருடன் திரும்புவாரா அனோஜன்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுவிக்க அவசர இராஜதந்திர தலையீடு தேவை - அலி சப்ரி சவூதி அரேபியாவில் பணிபுரிந்தபோது கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகும் இலங்கை வாலிபரை விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கம் அவசர இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தனது 'X' தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அலி சப்ரி, அனோஜன் சிவராஜா என்ற இளைஞனுக்கு ஆரம்பத்தில் விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டு சிறைத்தண்டனை, மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் தான் விசனமும் கவலையும் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். "சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அனோஜன் சிவராஜா எனும் இலங்கை இளைஞனுக்கு விதிக்கப்பட்டிருந்த 5 வருட சிறைத்தண்டனை, மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் சட்ட அமைப்பை மதிக்கும் அதேவேளை, குற்றம் சாட்டப்பட்ட செயலுக்கு இவ்வளவு கடுமையான தண்டனை விதிக்கப்படும்போது அமைதியாக இருக்க முடியாது என்ற கருத்தாடலும் சமூகத்தில் உருவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் செய்யப்பட்ட புண்படுத்தும் கருத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதே கடுமையான தீர்மானமாக இருக்கும் பின்னணியில், அந்தச் செயலுக்காக மனித உயிரைப் பறிப்பது மனிதநேயத்திற்கு எதிரானது என்பதோடு, எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். குறிப்பிட்ட கருத்தை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அதை நீக்கவும், அது தொடர்பாக பகிரங்க வீடியோ மூலம் மன்னிப்பு கேட்கவும் அனோஜன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனவேதனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தவறுக்காக, ஒரு மனிதன் வருந்துவதற்கும், தன் தவறைத் திருத்திக் கொண்டு மீண்டும் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும் உள்ள வாய்ப்பை முற்றாக இல்லாமலாக்கக் கூடாது. இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு சவூதி அதிகாரிகளிடம் கருணை அடிப்படையில் அந்த இளைஞனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் இலங்கை அரசாங்கம் தலையிட்டு அனோஜனுக்காக முறையான சட்ட உதவியை வழங்கவும், உயர்மட்ட இராஜதந்திர மட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதியை நடைமுறைப்படுத்தும்போது கருணைக்கும் இடமளிக்கப்பட வேண்டும். மீண்டும் தனது குடும்பத்தாரிடம் திரும்பி புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அனோஜனுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்" என்றும் அந்த 'X' பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment