ஆதிசிவன் ஆலயத்திற்கு புத்தர் சிலையுடன் வந்த பிக்கு - சற்று முன்னர் பெரும் பதற்றம்




வவுனியா - நெடுங்கேணி - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலை ஒன்று கொண்டு வந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று (26) புரட்டாதிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாறி ஆலயத்தில் பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து அன்னதானத்துடன் கூடிய விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் வருகை தந்த குழுவினர், ஆலய வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த மத வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் அங்கு கூடியிருந்த இந்து மக்களிடையே அதிர்ச்சியும் எதிர்ப்பும் நிலவி வருவதுடன் சம்பவ இடத்தில் பெருமளவிலான காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு, அவர்களின் பெயர் மற்றும் விபரங்களை முழுமையாகப் பதிந்த பின்னரே காவல்துறையினரால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், வைத்தியர் பி. சத்தியலிங்கம், துரைராசா ரவிகரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.








இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பினை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment