ஓய்வின்றி வாக்குமூலம் வழங்கும் நாமல்..!




நடைபெற்றுவரும் விசாரணைகளுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன என்பவரால், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கேற்பவே இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றை கிரிஷ் நிறுவனத்திற்குப் பெற்றுக்கொள்வதற்கும், அதற்குரிய அனுமதிகளை விரைவுபடுத்தி வழங்குவதற்கும் ஒத்துழைப்பு அளித்ததற்காக 3 சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு இந்த இலஞ்சப் பணம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன கடந்த 24 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதுடன், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையைக் கருத்திற்கொண்ட நீதவான், இச்சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கினார்.

இதற்கமைய, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (25) காலை கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலைக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொண்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


Post a Comment