இலங்கை மக்களே அவதானம்-அதிர்ச்சியில் வங்கி அதிகாரிகள்

இலங்கையின் வங்கித்துறையை இலக்கு வைத்து, ஒழுங்கமைக்கப்பட்ட டிஜிட்டல் மோசடி குழுக்கள் செயற்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது நாட்டின் நிதிப் பாதுகாப்பு மற்றும் வங்கித்துறையின் ஸ்திரத்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அதிகாரிகளும் முக்கிய வணிக வங்கித் தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.

இலகுவான வருமானத்தை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் இந்த வலைப்பின்னல்கள் மூலம் வங்கித்துறையை சர்வதேச நிதிக் குற்றங்களுக்கான பாதையாக மாற்றி வருகின்றன.

இந்த மோசடியாளர்கள் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சட்டப்பூர்வமான வணிகங்கள் என மக்களை நம்பவைத்து ஏமாற்றுவதாக சில முன்னணி வங்கிகளின் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஆரம்பக் கட்டத்தில் சிறிய தொகையை கணக்குகளுக்கு வரவு வைத்து வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குகின்றனர். பின்னர் அவர்களின் வங்கிக்குறிப்பு விவரங்கள், இரகசிய எண்கள் மற்றும் பிற முக்கியமான பாதுகாப்புத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முற்படுகின்றனர்.

இவ்வாறு பெற்றுக்கொள்ளும் இரகசியத் தகவல்கள் மூலம் கணக்குகளின் கட்டுப்பாட்டை குற்றவாளிகள் கைப்பற்றுகின்றனர்.

அதனை தொடர்ந்து கணக்கு உரிமையாளருக்குத் தெரியாமல் பாரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றங்களுக்கு அக்கணக்குகளைப் பயன்படுத்துவதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாடகை அடிப்படையில் அல்லது விலைக்கு வாங்கப்பட்ட இத்தகைய கணக்குகள் ஊடாக ஏற்கனவே மில்லியன் கணக்கான பணம் புழக்கத்தில் விட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோசடிகளின் தீவிரத்தன்மை அதன் சர்வதேச பரிமாணங்களினால் மேலும் அதிகரித்துள்ளது.




Post a Comment