யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தபாலகத்திற்குச் சொந்தமான காணி, நீதிமன்றக் காணி, பருத்தித்துறை நகர சபைக்குச் சொந்தமான காணிகள் மற்றும் பருத்தித்துறை வெளிச்சவீட்டுப் பகுதி ஆகியவற்றை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், ஆயுதப் படைகள் அங்கிருந்து வெளியேறக் கோரியும் பிரம்மாண்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று வௌ்ளிக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் ஆரம்பமாகி, பேரணியாக வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தைச் சென்றுடைந்தது. அங்கு ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜர் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இப்போராட்டத்தில் பின்வருவோர் உட்படப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்:
பாராளுமன்ற உறுப்பினர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்: செல்வராஜா கஜேந்திரன்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்: சந்திரலிங்கம் சுகிர்தன்
நகர சபை தவிசாளர்: வின்சன் டி போல் டக்லஸ் போல்
பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர்: உதயகுமார் யுகதீஷ்
ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர்: வேந்தன்
இவர்களுடன் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பருத்தித்துறை வர்த்தகர்கள், பிரதேச மக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் இதில் பங்கேற்றுத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
