மீண்டும் களத்தில் குதித்த தென்னிலங்கை நாயகன்
மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசம்
இலங்கைக்கான புதிய சீனா தூதுவர் வெய் {ஹவாஷியாங் இற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி தனது நற்சான்றிதழ்களை கையளித்ததன் பின்னர், இலங்கையின் சீனா தூதுவராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள வெய் ஹுவாஷியாங் அவர்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
சந்திப்பின் போது, சீன நாகரிகத்தின் ஆழமான அர்த்தத்தை மிகவும் நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கும் பாரம்பரிய சீன ஓவியங்கள் அடங்கிய விசேட நூல் ஒன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குச் சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
அதற்காகத் தூதுவருக்கு தனது நன்றியைத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இலங்கைக் கலாச்சாரத்தையும் மக்களையும் சிநேகபூர்வமாக அரவணைத்து, நட்புறவு ரீதியான பங்காண்மையுடன் இரு நாடுகளும் இதுவரை வந்த பாதையை இதன்போது மீட்டிப் பார்த்ததுடன், சீன அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும் தனது நன்றியைத் தெரிவித்தார்.