சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்தார்.
அப்போது, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
குற்றச் செயல்களில் சிக்கக்கூடிய இளைஞர்கள் குற்றவாளிகளாக மாறுவதற்கு முன்பே அவர்களை மீட்கும் வகையில் சமூக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் விஜய் கூறினார்.
தமிழ்நாட்டில் மக்கள் அச்சமின்றி வாழ்வதையும், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதையும் அரசின் முக்கிய நோக்கங்களாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையை பயன்படுத்தும்போது அனைவரும் பொறுப்புடன் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்திய விஜய், அரசியல் காரணங்களுக்காக தனிப்பட்ட முறையில் மக்களையும், குறிப்பாக பெண்களையும் தரம் தாழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
சமீப காலங்களில் தமிழகத்தில் ஆபாசமும் வன்மமும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பெண்களை அவதூறாகவும் இரட்டை அர்த்தத்திலும் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கடுமையாக தெரிவித்தார்.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினால் சட்டம் தனது கடமையை செய்யும் என்றும் விஜய் எச்சரித்தார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் சந்தித்த அவமானங்களை சுட்டிக்காட்டிய விஜய், எதிர்காலத்தில் எந்தப் பெண்ணுக்கும் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது என வலியுறுத்தினார்.
சட்டசபையில் விஜய் பேசிய இந்த கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

