புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம், கலஹா - நிலம்பா, குருகேலே பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த குடும்பத்தின் இளைய மகளான சனுதி லக்ஷானி என்ற 07 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (02) பிற்பகல் தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, பெற்றோருக்குத் தெரியாமல் சமையலறையில் இருந்த சிறிதளவு புளியைச் எடுத்துச் சாப்பிட அச்சிறுமி முயன்றுள்ளார்.
இதன்போது, புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமிக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அறிந்ததும் வீட்டிலிருந்த தாய் உள்ளிட்ட உறவினர்கள், சிறுமியை லொறி ஒன்றில் பேராதனை போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
இருப்பினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது பேராதனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
