மஸ்கெலியா காட்மோர் தனியார் தேயிலைத் தோட்டத்தின் கல்மலைப் பிரதேசத்தில், அதிகளவு செங்குத்தான பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (20) அன்று முற்பகல் அப்பகுதியில் பெய்த அடைமழை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. அச்செங்குத்தான பகுதியில் வசிக்கும் 24 தோட்டக் குடியிருப்புகளின் உறுப்பினர்களுக்கு கடுமையான உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அதிக செங்குத்தான இப்பகுதியில், 2017ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடத்திய ஆய்வில், அச்செங்குத்தான பகுதியில் உள்ள 24 தோட்டக் குடியிருப்புகளின் உறுப்பினர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கடந்த 20ஆம் திகதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, செங்குத்தான பகுதியில் கடுமையான ஆபத்தான நிலையில் வசிக்கும் 06 குடும்பங்களைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள் அந்த வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, தற்காலிகமாக அதே தோட்டத்தின் வைத்தியரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காட்மோர் கிராம உத்தியோகத்தர் பிரதீபா தெரிவித்தார்.
இந்த நிலச்சரிவு தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகம் ஊடாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம உத்தியோகத்தர் பிரதீபா மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் குறித்த ஆபத்தான பகுதியில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் உயிர் ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு, தமக்குக் குழந்தைகளுடன் மீளக் குடியயர்வதற்காக (மறுசீரமைக்கப்பட்ட இடத்தில் குடியமர்வதற்கு) உடனடியாகப் பொருத்தமானதொரு இடத்தில் வீடுகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
