இலங்கை கடற்படையினரால், புத்தளம் பள்ளிவாசல்பாடு மற்றும் நாவற்காடு கடற்கரைப் பகுதிகளில் 2026 செப்டம்பர் 08 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுச் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய, வடமேல் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னி நிறுவனமும், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து, புத்தளம் பள்ளிவாசல்பாடு மற்றும் நாவற்காடு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொண்ட இக்கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதிகளில் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய 64 உரைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கை காரணமாக கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும், 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி இவ்வாறு கைப்பற்றப்பட்டது.
மேலும், இக்கூட்டு நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.







