அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் மட்டுமே போதுமானது எனவும், அதற்குச் சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை எனவும் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை மேற்கோள்காட்டி, சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
இந்த 22ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்த விபரங்கள் என்பனவற்றையும் உள்ளடக்கி, இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, உயர்நீதிமன்றத்தில் குறித்த திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த ஐந்தங்க நீதிபதிகள் குழாம், தனது வியாக்கியானத்தை அண்மையில் சபாநாயகருக்கு அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற மக்கள் ஆணை அல்லது சர்வஜன வாக்கெடுப்புத் தேவைப்படாது என உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
