ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலக மட்டத்திற்கு பரவலாக்கப்பட்டதைத் தொடர்ந்து, படிவங்களை கையாள்வதில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய வட மாகாணத்தைச் சேர்ந்த 15 பிரதேச செயலகங்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பொதுமக்களுக்கு விரைவாகவும் திறமையாகவும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 'மெஹெவர பசசும்' (பணிப் பாராட்டு) நிகழ்வு, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (26) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும், விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வதிலும் அவற்றிற்கு விரைவாகப் பதிலளிப்பதிலும் காட்டிய திறமையின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா மூன்று பிரதேச செயலகங்கள் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டன.
இதற்கமைய யாழ் மாவட்டம் நல்லூர் பிரதேச செயலகம் முதலிடத்தையும், சாவகச்சேரி மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களையும் பெற்றன.
கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி பிரதேச செயலகம் முதலிடத்தையும், பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் பெற்றன.
மன்னார் மாவட்டம்: நானாட்டான் பிரதேச செயலகம் முதலிடத்தைப் பெற்றதுடன், மன்னார் நகரம் மற்றும் மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலகங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றன.
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் முதலிடத்தையும், ஒட்டுசுட்டான் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றன.
வவுனியா மாவட்டம் வவுனியா பிரதேச செயலகம் முதலிடத்தையும், வவுனியா வடக்கு மற்றும் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் பெற்றன.
இந்நிகழ்வில் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்லத்தம்பி திலகநாதன், எம். ஜெகதீஸ்வரன், மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே, மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
