SLSI அனுமதி இன்றி டின் மீன் தயாரித்த நிறுவனம் முற்றுகை: 15 லட்சம் பெறுமதி கையிருப்பு கைப்பற்றல்

இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் SLSI செல்லுபடியாகும் உரிமம் இன்றி பன்னல, எலபடகம பகுதியில் இயங்கிய டின் மீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று 07.08.2026 முற்றுகையிட்டது.

நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதன் போட்டித் திறன் மேம்பாட்டு பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான டின் மீன் கையிருப்பு கைப்பற்றப்பட்டது. இங்கு தயாரிக்கப்பட்ட டின் மீன்கள் சிறப்பு அங்காடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.

தயாரிப்பு திகதி குறிப்பிடாமை, சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தல், விற்பனை மற்றும் விநியோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சந்தேகநபர்களும் கையிருப்பும் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.



Post a Comment