இலங்கை சிறைச்சாலைகளில் மனித உரிமை மீறல்கள் மற்றும் தீவிர நெருக்கடி: மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கண்டனம்

இலங்கையின் சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு நிலவும் மோசமான மனித உரிமை மீறல்கள், மனரீதியான சித்திரவதைகள் மற்றும் ஊழல்களே அண்மைய பதற்றமான சூழ்நிலைகளுக்கு முதன்மையான காரணம் என்றும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு மற்றும் பல்வேறு சமூகப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா, சுமார் 10,000 கைதிகளை மட்டுமே பராமரிக்கக்கூடிய நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் தற்போது 40,000க்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். 

குறிப்பாக, 10 மில்லிகிராமுக்கு அதிகமான போதைப்பொருள் வழக்குகளில் மேல்முறையீட்டு நீதிமன்றம் மூலமே பிணை பெற முடியும் என்ற சூழலில், அதற்குத் தேவையான அரசின் இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வருவதில் ஏற்படும் கடுமையான தாமதமே இந்தச் சிறை நெரிசலுக்கு முக்கிய காரணியாக அமைகின்றது. 

மேலும், சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பொலிஸாரையோ அல்லது குற்றப்புலனாய்வுத் துறையினரையோ (CID) ஈடுபடுத்தாமல், தடயவியல் ரீதியான நடுநிலையான விசாரணைகள் நடத்தப்பட்டு கைதிகளின் குறைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமச்சந்திர தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கையில், சிறைச்சாலைகளில் கைதிகள் விலங்குகளைப் போல நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். 

பொலிஸார் தினசரி கைது இலக்குகளை எட்டுவதற்காகவே மக்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், கைதிகளை பரிசோதிக்கும் என்ற பெயரில் பெண்களின் ஆடைகளைக் களைந்து அநாகரிகமான முறையில் சோதனையிடும் நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார். 

இத்தகைய மனிதவிலக்க நடவடிக்கைகளுக்குப் பதிலாக நவீன ஸ்கேனர் இயந்திரங்களைப் பயன்படுத்த முடியும் என்றும், சுடுகாட்டுச் சட்டத்தைத் திருத்த முற்படும் அரசாங்கம் வாழும் மனிதர்களுக்காகச் சிறைச்சாலைகள் சட்டத்தில் உடனடி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, வறுமை, கல்வியின்மை மற்றும் சமூக அநீதி காரணமாகவே ஏழைகள் சிறையிலடைக்கப்படுவதாக மேஜர் அஜித் பிரசன்னா தெரிவித்தார். 

சிறைச்சாலைகளுக்குள் கைதிகளுக்குச் சரியான ஆடை, சோப்பு அல்லது குடிநீர் வசதிகள் கூட வழங்கப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், சிறைக்குள் போதைப்பொருட்கள் மற்றும் சொகுசு அலைபேசிகளைக் கடத்துவது கைதிகள் அல்ல, ஊழல் நிறைந்த சிறை அதிகாரிகளே என்றும் சாட்டினார். 

அதிகாரிகளின் இத்தகைய சட்டவிரோதச் செயல்களை மறைக்கவும் ஸ்கேனர்கள் பொருத்துவதைத் தடுக்கவுமே கைதிகள் மீது கடுமையான மனரீதியான சித்திரவதைகள் பிரயோகிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

சிறைச்சாலைகளில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டிக்கும் கைதிகள் திட்டமிட்டுத் தாக்கப்படுவதாகவும், சாட்சியங்களை அழிக்கும் நோக்கில் சில கைதிகள் படுகொலை செய்யப்படுகிறார்களோ என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதி சுதேஷ் நந்திமால் கவலை வெளியிட்டார். 

அத்துடன், நுகர்வோர் உரிமைகள் ஆர்வலர் அசேல சம்பத் கருத்துத் தெரிவிக்கையில், சிறைச்சாலைகளில் நிலவும் ஊழல்களைத் தடுக்க நீதி அமைச்சு உடனடியாக அனைத்துச் சிறைகளிலும் நவீன ஸ்கேனர் இயந்திரங்களைப் பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பாரம்பரியமான பழைய சட்டங்களை வைத்துக்கொண்டு இந்தச் சிறைச்சாலை நெருக்கடியைத் தீர்க்க முடியாது என்பதால், அரசாங்கம் உடனடியாகக் கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்த ஊடக சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

Post a Comment