அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் செப்.15-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களுக்கு 1,28,499 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் (TNMSC) கடந்த ஜூலை 14-ம் தேதி இத்திட்டத்துக்கான டெண்டர் கோரப்பட்டது. இதில் 11 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.
தங்கம் விலையைத் தவிர்த்து, ஒரு மோதிரத்துக்கான செய்கூலி, சேதாரம், காப்பீடு, பேக்கிங் மற்றும் பிஐஎஸ் தரமுத்திரை உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நிறுவனங்கள் விலையாக குறிப்பிட வேண்டும் என்பது டெண்டர் நிபந்தனை ஆகும்.
அதன்படி வெறும் ஒரு பைசா என்ற மிகக் குறைந்த விலைப்புள்ளியில் தங்க மோதிரம் செய்து தருவதாக குறிப்பிட்ட ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு 70 சதவீதம், அதே விலைக்கு செய்துதர சம்மதித்த கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கு 30 சதவீதம் என மோதிரங்கள் தயாரிக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
