பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் இல்லங்களை வீடியோ பதிவு செய்த நபர் கைது!

கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களைச் சுற்றியுள்ள வீதிகளை வீடியோ பதிவு செய்த நபர் ஒருவர், நேற்று (6) இரவு குருந்தவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வீடியோ பதிவு செய்யப் பயன்படுத்திய கைப்பேசியும் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

சொகுசு காரில் வந்த நபர் ஒருவர், வாகனத்தை நிறுத்தி பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகிலுள்ள வீதியிலிருந்து வீடியோ பதிவு செய்வதை, பிரதான நுழைவாயிலில் கடமையிலிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் அவதானித்துள்ளார்.

அந்த அதிகாரி, அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்; ஒருவருக்கு இது குறித்து அறிவித்ததையடுத்து, அவர் கொழும்பு அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

கொழும்பு அவசர அழைப்புப் பிரிவின் அறிவித்தலுக்கு அமைவாகச் செயற்பட்ட குருந்தவத்தை பொலிஸ் நிலையத்தின் இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு, சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கைப்பேசியைப் பரிசோதித்த போது, பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வீதிகளும், பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வீதிகளும் பதிவு செய்யப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், பொழுதுபோக்காகவே இவ்வாறு வீடியோ பதிவு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், சந்தேகநபரிடம் நடத்திய தீவிர விசாரணையின் போது, அவர் தனது வதிவிடம் குறித்து முரண்பாடான தகவல்களை வெளியிட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர் அலுபோமுல்ல, அருக்கொட, நிவுடாவ வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குருந்தவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment