நீதிக்கான நீள் பயணம் - வீதிக்கிறங்கிய மக்கள்

 



சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் பேரணி ஆரம்பமானது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட விசேட வாகனம் பேரணியின் முன்னிலையில் சென்றதுடன், உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.

பல ஆண்டுகளாக தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி வரும் குடும்பங்கள், உண்மை, நீதி மற்றும் தமது அன்புக்குரியவர்களின் நிலை தொடர்பான தெளிவான பதில் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

யாழ்ப்பாண நகரின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்தது. அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்ற உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Post a Comment