ஒரே விமானத்தில் 200 ஜப்பானியர்கள் இலங்கை வருகை! - சுற்றுலாத்துறையில் புதிய எதிர்பார்ப்பு


இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், 200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழுவொன்று இன்று (30) இலங்கைக்கு புறப்பட்டு வந்துள்ளது.

‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) ஏற்பாடு செய்துள்ள இந்தக் குழுவினர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL455 விமானம் மூலம் நரிட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு பயணித்துள்ளனர்.

ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் முதல் செயலாளர் (வணிகம்) சந்துன் சமீரா ஆகியோர் நரிட்டா விமான நிலையத்திற்குச் சென்று சுற்றுலாப் பயணிகளை நேரில் சந்தித்து வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர்.

இலங்கைக்கு வருகை தரும் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவுள்ளதுடன், இலங்கையின் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு சேவைகளையும் அனுபவிக்கவுள்ளனர்.

இலங்கைத் தூதரகத்தின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ இந்தச் சுற்றுலாப் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் உரையாடிய தூதுவர் குமாரசிங்க, அவர்களின் வருகையை வரவேற்றதுடன், இலங்கையை தங்களது விடுமுறை destination ஆக தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் பயணம் பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் அமைய வாழ்த்தியுள்ளார்.

ஒரே விமானத்தில் 200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையில் முக்கிய முன்னேற்றமாகும் என தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒரே குழுவாக இலங்கைக்கு பயணிக்கும் மிகப்பெரிய ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் குழுக்களில் இதுவும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளிடையே இலங்கை தொடர்பான ஆர்வம் அதிகரித்து வருவதுடன், இலங்கை சுற்றுலாத்துறையின் தொடர்ச்சியான முயற்சிகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்தும் என தூதுவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், ஜப்பானிய பயணிகளிடையே இலங்கையை பாதுகாப்பானதும் கவர்ச்சிகரமானதுமான சுற்றுலா destination ஆக முன்னிறுத்துவதில் ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ வழங்கி வரும் பங்களிப்பையும் இலங்கைத் தூதரகம் பாராட்டியுள்ளது

Post a Comment