அரசாங்கம் என்ற ரீதியில் சிறைச்சாலை குழப்பங்களையும் வன்முறைகளையும் நிதானமான முறையில் கையாண்டு, அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றோம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று ( 08.08.2026) ஊடக இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் சமீபத்தில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த பிரதி அமைச்சர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் இலங்கை போதைப் பொருட்களின் மத்திய நிலையமாக காணப்பட்டது. ஆனால் எமது அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்ற பின்னர் போதைப் பொருளை ஒழிப்பதற்கான பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது நாட்டுக்குள் கொண்டு வரப்படும் போதைப்பொருட்கள் வேகமாக கைப்பற்றப்படுவதுடன் அதனை கொண்டு வரும் நபர்களும் விரைவாக கைதுசெய்யப்படுகின்றனர்.
போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போதைய சம்பவங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக, சிறைக்குள் இருக்கும் கைதிகளைத் தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், , நீதி அமைச்சர், மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்று அவசர கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.
எனவே சில அரசியல்வாதிகளும் போதைப்பொருள் வியாபாரிகளும் சிறைக்குள் நடத்த நினைப்பதை நடத்தவிடாது இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துகின்ற பாரிய பொறுப்பு அரசாங்கமாகிய எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
