இலங்கை ஒரு மாற்றுச் சரக்கு போக்குவரத்து மையமாக உருவாகி வருகிறது...!

 

மத்திய கிழக்கில் ஏற்படும் மோதல்களால் ஹோமுஸ் நீரிணை மூடப்பட்டு, உலகளாவிய கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை ஒரு மாற்றுச் சரக்கு போக்குவரத்து மையமாக உருவாகி வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட 14 லம்போர்கினி (Lamborghini) சொகுசு கார்கள் கடல் வழியே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. 

இத்தாலியிலிருந்து கடல் வழியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்த இக்கார்கள், ஏழு 40 அடி கொள்கலன்களில் ஏற்றப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

அங்கிருந்து ஆகஸ்ட் 21 ஆம் திகதி காலையில் பாரிய சரக்கு விமானம் மூலம் துபாய் மற்றும் தோஹா (கத்தார்) ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளன. 

இந்த கார்களில் உள்ள சில விளையாட்டு கார்களின் மதிப்பு சுமார் ரூ. 100 மில்லியன் முதல் மிகவும் விலையுயர்ந்த மொடல்கள் ரூ. 500 மில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாரம்பரிய பாதைகளில் நிலவும் அமைதியின்மையால், இலங்கையின் இந்த புதிய 'கடல்-வான்' (Sea-to-Air) தளவாடப் பாதை நாட்டிற்குப் பொருளாதார நன்மைகளைத் தரும் என இப் போக்குவரத்தைக் கையாளும் டேனிஷ் (Danish) நிறுவனப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். 

இலங்கையின் தளவாடத் துறைக்கு இது ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்பட்டாலும், ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற செய்தியாளர்களுக்கு ஆரம்பத்தில் விமான நிலைய அதிகாரிகள் உதவினர். 

(Cargo Village) ஏற்றுமதிப் பிரிவில் பணிபுரியும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் ஊடக அனுமதி மறுத்து, செய்தியாளர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். 

அதேவேளையில், அங்கிருந்த பொதுமக்கள் தங்களது கைபேசிகள் மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஊடகங்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது கேள்விகளை எழுப்பியுள்ளது. 

சர்வதேச அளவில் கடல்சார் பாதைகள் தடைபடும் இக்காலகட்டத்தில், உயர் மதிப்புடைய சரக்குகளைக் கையாளும் திறனை இலங்கை நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

Post a Comment