எல் நினோவால் முழு இலங்கைக்கும் ஏற்படவுள்ள தாக்கம்-அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

 

எல் - நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகளின் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் நேற்றைய தினம் (21.08.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதுவரை பாதிக்கப்பட்டுள்ள எல் - நினோ நிலைமையால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும், மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய நீர்தேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வினவினார்.

கடந்த யால பருவத்தில் முன்னெச்சரிக்கையுடன் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக பயிர்ச் சேதங்கள் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக விவசாய அமைச்சு அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியதுடன், மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய நீர்தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்களின்படி எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் முழு நாட்டிற்கும் கடுமையான வறண்ட காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், அந்த தாக்கத்தினால் விவசாயம், பெருந்தோட்டத் தொழில், நன்னீர் மீன்பிடித் தொழில் மற்றும் நீர் மற்றும் மின்சார விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அந்த நிலையை எதிர்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வினவினார்.

பாதிக்கப்படக்கூடிய காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றிப் பேணுவதுடன், அனர்த்தத்தால் பாதிக்கப்படும் மக்களின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அவர்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து அந்த நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 


Post a Comment