திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில், மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கியிருந்த சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கை இன்று (06.08.2026) நுவரெலியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகளும், ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலையின் கால்நடை வைத்தியரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
கடந்த (05) ஆம் திகதி மாலை சுமார் 5.00 மணியளவில், பொறியில் சிக்கியிருந்த சிறுத்தையை தோட்டத் தொழிலாளர்கள் அவதானித்ததையடுத்து, உடனடியாக தோட்ட முகாமையாளருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, தோட்ட முகாமையாளர் நுவரெலியா வனவிலங்கு அலுவலகத்திற்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுத்தைக்கு கால்நடை வைத்தியர் சிகிச்சை அளித்ததுடன், அதன் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு வருகிறது. பின்னர், முழுமையாக குணமடைந்தவுடன் இயற்கை வாழ்விடத்தில் மீண்டும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில், சட்டவிரோதமாக வேட்டைப் பொறி வைத்த நபரை அடையாளம் காணும் விசாரணைகளை வனவிலங்கு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கால்நடை வைத்தியர்கள், “ தற்போது விதிமுறைப்படி வேலை செய்யும்” தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையிலும், மனிதநேய அடிப்படையில் ரந்தெனிகலையிலிருந்து வருகை தந்து, பொறியில் சிக்கிய சிறுத்தையை மயக்கமடையச் செய்து மீட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சிறுத்தை சுமார் 4 வயதுடைய பெண் சிறுத்தை என்றும், சிறுத்தையின் அடிவயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் இரண்டு கம்பிகளாலான பொறிகள் இறுக்கியதில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மீட்கப்பட்ட சிறுத்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது தங்களது வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருவதாக வைத்தியர் அகலங்க பிணிதிய மேலும் தெரிவித்துள்ளார்.
