அநுர அரசின் அமைச்சர்கள் இருவருக்கிடையில் வெடித்தது மோதல்-வெளியான காரணம்

 

நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியை நியமிப்பது தொடர்பான சர்ச்சையை அடுத்து, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித கொடித்துவக்க ஆகியோருக்கு இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இதன் காரணமாக அரசாங்கத்திற்குள் கடுமையான நிர்வாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பணிநிறுத்தம் செய்யப்பட்ட விமான நிறுவன ஊழியர் ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பாக பிரதி அமைச்சரினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ விசாரணையில் அமைச்சர் நேரடியாகத் தலையிட்டதை அடுத்து, நேற்று இந்த மோதல் உச்சமடைந்தது. காலையில் தொடங்கவிருந்த விசாரணையை மாலை வரை தாமதப்படுத்தி, இறுதியில் அதை நேரத்திற்கு முன்பே முடித்து வைத்ததன் மூலம் அமைச்சர் அந்த நடவடிக்கைகளை சீர்குலைத்தார் எனக் கூறப்படுகிறது. 


விமானப் போக்குவரத்து துறை பிரதி அமைச்சரின் மேற்பார்வையின் கீழ் வந்தபோதிலும், அமைச்சரின் தலையீடு தேசிய விமான நிறுவனத்தின் கடுமையான நிர்வாகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து முடக்குவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

விமான நிறுவனத்தில் நீண்டகாலமாக நிலவும் தலைமைத்துவ வெற்றிடம் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள நிலையிலேயே இந்த அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது. 

அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், 16 மாதங்களாக ஒரு தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கத் தவறியதற்காக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இரண்டு சுற்று நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்ட போதிலும், பொருத்தமான ஒரு நபரை கண்டறிய முடியாமல் போனது சோகமான நிலை என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வெற்றிடத்திற்குத் தீர்வுகாணும் வகையில், நிறுவனத்திற்குள்ளிருந்தே இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தலைவர் அண்மையில் அறிவித்திருந்தார். 

இதன்படி, தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் மற்றும் வர்த்தகத் துறைத் தலைவர் ஆகிய இரு உயர் அதிகாரிகள் பரிந்துரைக்கப்பட்டனர். 

எனினும், தனது பிரதி அமைச்சருடன் கலந்தாலோசிக்காமல் அமைச்சர் அனுர கருணாதிலக்க தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவரை இடைக்கால சி.இ.ஓ ஆகத் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.  

ஊழல் குற்றச்சாட்டுகளும் தொழிற்சங்க அதிருப்தியும் இருப்பினும், விமான நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்பத் துறையில் நடைபெறும் ஊழல் நடவடிக்கைகள் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவரைப் பதவி உயர்த்தும் முயற்சி திடீரென முடங்கியது.


முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றில், சமர பெரேராவின் தலைமையின் கீழ் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் தவறான நிர்வாகம் கடுமையாக அதிகரித்துள்ளது. பெரேரா விமான நிறுவனத்தின் எதிர்காலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், அமைப்பின் தொழில்முறை தோற்றத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்துபவராகவும் மாறியுள்ளார்' என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அமைச்சர் உத்தியோகபூர்வ நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள போதிலும், அவரை இடைக்கால சி.இ.ஓ ஆக நியமிப்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.  

இதற்கிடையே, திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணையில் ஜே.வி.பி சார்ந்த தொழிற்சங்கம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் பிரதிநிதிகள் வெளியே காத்திருக்க நேரிட்டதால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். 

தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவரின் நியமனத்திற்கு முன்னதாக, அவரது ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொழிற்சங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது. 

இது ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தைச் சுற்றியுள்ள அரசியல் மற்றும் செயல்பாட்டு மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.



Post a Comment